Monday, June 26, 2006

மொழியும் அறிவும் - பெரியார்

மொழி என்பது ஒரு மனிதனுக்கு அவ்வளவு முக்கியமான சாதனம் அல்ல அது இயற்கையானதும் அல்ல அதற்கு ஒரு கட்டாயமும் தேவையில்லை.

மொழி, மனிதனுக்குக் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு-விஷயங்களைப் புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் அளவிற்குத் தேவையானதேயொழிய பற்றுக்கொள்ளுமளவிற்கு அவசியமானதல்ல.

மொழியானது சமுதாயத்திலுள்ள சூழ்நிலைக்கு ஏற்றதேயொழிய பொதுவாழ்விற்கு, உணர்ச்சிக்கு ஏற்றதல்ல. இந்த கருத்துக்களைக் கொண்டுதான் நாம் நமக்கு எந்த மொழி வேண்டும் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

நமக்குச் சொந்த மொழி என்பது - பிறந்த சாதியின் காரணமாக எனக்குக் கன்னடம் சிலருக்குத் தெலுங்கு பெரும்பாலானவர்களுக்குத் தமிழ் நாட்டுக்கு உரியது தமிழ்.

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு - தமிழ்நாட்டைப் பற்றி நினைத்துக்கொண்டு அரசியலுக்கானாலும், இலக்கியத்திற்கானாலும், போதனைக்கானாலும் ஒரு மொழி வேண்டுமானால் நாம் தேர்ந்தெடுக்கவேண்டியது தமிழ்மொழி என்பதாகத் தான் தோன்றும். அது ஓரளவிற்கு நியாயமாகும். ஆனால், நாடு நம்முடைய சொந்த நாடு ஆனாலும் ஆட்சி தமிழர்களல்லாத அன்னியர்களுடைய ஆட்சியாக இருப்பதால், அந்த அன்னியர்கள் பல நாடுகளை ஒன்று சேர்த்து அடக்கி ஆள்பவராக இருப்பதனால், அவர்களுடைய ஆட்சி நிலைப்பிற்கு, வசதிக்கும் ஏற்றபடி ஏதேதோ காரணங்களைச் சொல்லிக்கொண்டு, அன்னிய மொழியாகிய இந்தி மொழி என்பதுதான் ஆட்சி மொழியாகவும், கல்லூரி போதனா மொழியாகவும், பள்ளிகளில் கட்டாய மொழியாகவும் கூடி இருக்கவேண்டும் என்று ஆட்சியாளர்களால் வலியுறுத்தும் படியான நிலைமை நம் நாட்டுக்கு ஏற்பட்டுவிட்டது. இது நமக்கு ஒரு மாபெரும் கெட்ட வாய்ப்பும் வெட்கப்படத்தக்கதான சம்பவமுமாகும்.

இந்த நாட்டில் மேற்கண்டபடி இந்தி மொழி கட்டாய பாடமாக்கப் (மொழியாக்க) படவேண்டும் என்பதற்கு அரசாங்கமும், இந்த நாட்டுப் பார்ப்பனர்களும், அவர்களின் அருளால் பிழைக்கவேண்டும் என்ற நிலையிலுள்ள பெரும்பாலோரும் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் இந்தியைப் புகுத்தவும் கட்டாயப்படுத்தவும் இவைகளுக்காகத் தந்திரமான பல வழிகளைக் கோலவும் துணிந்து முன்வந்திருக்கிறார்கள்.

அதுபோலவே, தமிழ்மொழியை அரசியல் மொழியாகவும், கல்லூரி போதனா மொழியாகவும் பள்ளிகளில் கட்டாய மொழியாகவும் இன்னும் இலக்கிய மொழியாகவும் இருக்க வேண்டுமென்று தமிழர்களிடையே அரசியல்வாதிகள் என்போர்களும், மற்றும் புலவர்களும் இலக்கிய வாழ்வுக்காரர்களும், மற்றும் மொழிப்பற்று என்பதை சமயப் பற்றுபோல் முக்கிய பற்று என்று கருதுகின்றவர்களும் வலியுறுத்துகிறார்கள். கிளர்ச்சி வயப்பட்டவர்கள் இதற்காகக் கிளர்ச்சிகளும் செய்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரையில், இந்த இரண்டு மொழிகள் பற்றியும் கவலையில்லை பிடிவாதமுமில்லை. இவற்றுள் இந்தி எந்த வகையிலும் நமக்குத் தேவையில்லை என்பதோடு கண்டிப்பாக நம் நாட்டிற்குள்ளே இந்தியைப் புகவே விடக்கூடாது என்பது எனது கருத்தாகும். எந்தத் துறையில் நமது நாட்டிற்குள் இந்தி புகுந்தாலும், சமஸ்கிருதத்தினால் தமிழர்களும், தமிழ்நாடும் இன்று என்ன நிலைமைக்கு வந்து தொல்லையும் மடமையும் இழிவும் அனுபவிக்கிறார்களோ, சற்றேக் குறைய அந்த நிலைமைக்குத்தான் நம்மைக் கொண்டுபோய்விடும் என்பது எனது துணிபு. இந்தி, தமிழ் நாட்டையும் தமிழனையும் வட நாட்டானுக்கு-பார்ப்பனருக்கு அடிமைப்படுத்துவதல்லாமல் வேறு எந்த காரியத்திற்கும் பயன்படாது.

இந்தி ஆட்சிமொழியாய் இருக்கிறதெ என்றால், நாம் உலகம் உள்ள அளவும் வட நாட்டானுக்கு அடிமை ஆக இருப்பது என்று முடிவு செய்துகொண்டோமா? தமிழ் நாடு ஒரு நாளைக்கும் அன்னியன் ஆதிக்கம் இல்லாத சுதந்திர நாடாக இருக்கக்கூடாது என்பதுதான் தமிழ்நாட்டின் நிலையா? அப்படி இல்லை என்றால், இன்றைய அன்னிய நாட்டான் ஆதிக்க ஆட்சியைத் தற்கால (தற்காலிக) ஆட்சி என்றுதானே சொல்ல வேண்டும்?

மற்றும் இந்திமொழி, கலாசாலை போதனைக்கோ, இலக்கிய போதனைக்கோ, ஆட்சிமுறை போதனைக்கோ வேறுமொழியில் இருந்து இந்தி மொழியில் மொழிபெயர்த்து நம் நாட்டிற்குள் புகுத்த வேண்டிய அளவில்தான் இருக்கிறதே தவிர-மற்றபடி மூல நிதி (பொக்கிஷம்) அதில் என்ன இருக்கிறது? இன்று சட்ட அறிவோ, கலை அறிவோ, பொறியியல் அறிவோ, வைத்திய அறிவோ, விஞ்ஞான அறிவோ அளிக்கத்தக்க நேரிடைச் சாதனம் இந்திக்கு என்ன இருக்கிறது?

நிற்க, தமிழை எடுத்துக்கொண்டாலும் இன்று உலக ஞானத்தில் முற்போக்குத் தன்மையில் தமிழுக்கு என்ன சிறப்பு இருக்கிறது? தமிழனுக்கு முதலாவது தெளிவான நேரான சரித்திரம் இல்லை.

தமிழனுக்கு அதுபோலவே சமய ஞான சாதனமும் இல்லை. இவை மாத்திரமல்லாமல், தமிழனுக்கு என்று - ஆரிய ஆதிக்கமும் கலப்பும் அற்ற இலக்கியமும் இல்லை. அதாவது, ஆரியர் வரவுக்கு முந்தியது என்று சொல்லத்தக்க வண்ணம் விவகாரத்திற்கு இடமில்லாத தன்மையில் எதுவும் கிடைப்பது அருமையாகத்தான் இருக்கிறது. தமிழ் மொழி வேண்டுமானால் ஆரியத்திற்கு முந்தியது என்று ஒப்புக்கொள்ளலாம். அதுவும் தமிழனுக்கு இன்றளவும் என்ன பலனைக் கொடுத்திருக்கிறது? விஞ்ஞானத்திற்குச் சிறிதும் பயன்படத் தக்கதாய் இல்லை அறிவுக்கும் தக்கபடி பயனளிக்க முடியவில்லை. தமிழ்மொழி ஏற்பட்டுப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியும் அதைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழன் இன்னும் - இந்த விஞ்ஞானப் பரவல் காலத்திலும் உலகில் எங்கும் இல்லாத அளவு மூட நம்பிக்கை உடையவனாகவும், மான உணர்ச்சி என்பது 100-க்கு 75 பாகம் இல்லாதவனாகவும் இருந்துவருகிறான். மனித வாழ்விற்கு மொழி முக்கியம் என்றால் - உலகில் மற்ற மொழி நாடுகளைக் காணும்போது தமிழ் நாட்டுக்குத் தமிழ் என்ன பயன் அளித்திருக்கிறது?

தமிழை வளர்க்கவேண்டும் என்பதெல்லாம் கலைத்துறையிலோ, விஞ்ஞானத் துறையிலோ, மற்றும் சில துறைகளிலோ வேறு மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்கின்ற நிலைதானே தமிழுக்கு இருந்து வருகிறது?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ் மொழியானது, மொழியில் ஆகட்டும், பொருளிலாகட்டும், எழுத்திலாகட்டும், வேறு முறைகளிலாகட்டும் எவ்வித முன்னேற்றமும் மாறுதலும் அடையவில்லை. உலகத்திலேயே நீதி சிறந்த இலக்கியம் - குறள் தமிழில் உள்ளது. அது துருப்பிடித்துவிட்டது. என் அனுபவத்திற்கு எட்டியவரையில் உலகத்திலே சிறந்த துறை அறிவு தமிழிலுள்ள கணக்குமுறை, அதாவது இளஞ்சுவடி என்றும் எண் கணக்கு என்றும் சொல்லக்கூடிய இலக்க முறை. அது குப்பைக்கே போய்விட்டது. இவை இரண்டையும் கழித்துவிட்டால் தமிழில் இருந்து - தமிழன் தெரிந்துகொள்ளத் தக்கதோ தமிழனுக்குப் பயன்படக் கூடியதோ எதுவும் தென்படவில்லை. தமிழும் தமிழனும் பெரும்பாலும் பழங்காலச் சின்னமாகக் காணப்படுகின்றன.

தமிழனின் பேச்சுமொழி, தாய்மொழி-தமிழ் என்பதைத் தவிர, தமிழருக்கு வேறு உலக முக்கியத்துவம் எதுவும் எனக்குத் தென்படவில்லை. மற்றபடி, தமிழ் நாட்டிற்கு, தமிழருக்கு வேறு எந்த மொழி தேவையானது - நல்லது அரசியல், விஞ்ஞானம், கலை முதலியவைகளுக்கு ஏற்றது - பயன்படக்கூடியது என்று என்னைக் கேட்டால் - எனக்கு, ஆங்கில மொழிதான் சிறந்தது என்று தோன்றுகிறது. இது எனக்கு சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னமேயே தோன்றிய எண்ணமாகும்.

நான் 1939-ல் கோவைக் கல்லூரியில் அதன் பிரின்ஸிபாலின் தலைமையின் கீழ் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் பேசும்போது எடுத்துச் சொல்லியிருக்கிறேன். அந்தச் சமயம் நான் இந்தி எதிர்ப்புக்காக சிறைசென்று - சிறையினின்று விடுதலையாகி வந்த பிறகு, கல்லூரி மாணவர்களால் அழைக்கப்பட்டு "மொழி" என்னும் தலைப்பில் பேசிய பேச்சில் குறிப்பிட்டுருக்கிறேன். அந்தத் தலைப்பில் மொழியின் பயன் என்ன? பயனுக்கேற்ற மொழி எது? என்று 2 பிரிவுகளாய்ப் பிரித்துக் கொண்டு பேசியிருக்கிறேன். அப்பேச்சில் ஆங்கில எழுத்துக்களையே தமிழ் எழுத்துக்களுக்கு நெடுங்கணக்காக - அகர வரிசையாக எடுத்துக் கொள்ளலாம் என்றும், தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற எழுத்து ஆங்கிலத்தில் ஏதாவது ஒன்றிரண்டு குறையுமானால் அதற்கேற்ப தமிழ் எழுத்தையே எடுத்துக்கொள்ளலாமென்றும் சொன்னதோடு, மற்றும் ஆங்கிலமே தமிழனின் பேச்சுமொழியாக ஆகும்படியான காலம் ஏற்பட்டால் நான் மிகமிக மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவேன் என்றும் பேசியிருக்கிறேன். சமீபத்தில் நுங்கம்பாக்கத்தில் இந்தி எதிர்ப்புக் கூட்டம் என்பதாக ஒரு கூட்டம் கூட்டப்பட்ட காலத்தில் எல்லாக் கட்சிக்காரகளும் வந்திருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் பேசிய திருவாளர் இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தமிழ்நாட்டுக்கு ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் என்றும் பேசினார் பிறகு நான் பேசும்போதும் அதுபோலவே பேசிவிட்டு, ஆங்கிலம் பேச்சு மொழியாக இருந்தாலும் மிகவும் பயன்படும் என்றும் சொன்னேன். அதே சமயம் இப்படி நான் சொல்வதால், மொழி வெறியர்கள் சிலர் என்னை, "நீ யாருக்குப் பிறந்தாய்?" என்றுகூடக் கேட்டார்கள். "அந்த மொழியைப் பேச வேண்டும் என்று சொல்வதானால் நாம் ஆங்கிலேயனுக்குப் பிறப்பதானால், மற்றபடி காப்பி குடிப்பது முதற்கொண்டு இரயில், ரேடியோ, ஆகாய விமானம், டெலிபோன், மருந்து முதலியவை ஆங்கிலேயனுடையவை என்று தெரிந்து தெரிந்து அனுபவிக்கிற நாம் எத்தனை தடவை ஆங்கிலேயனுக்குப் பிறந்தவர்களாவோம் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால், மொழி பேசுவதானால் ஆங்கிலேயனுக்குப் பிறந்தவனாகமாட்டோம்" என்று சொன்னேன். தமிழரின் மூலமோ தமிழ் இலக்கியத்தின் மூலமோ, தமிழ்ச் சமயம், தமிழ்ப் பண்பாடு மூலமோ நாம் உலக மக்களின் முன்னிலையில் ஒருநாளும் இருக்க முடியாது.

தமிழ் வடமொழியைவிட இந்தி மொழியைவிடச் சிறந்தது என்பதிலும், பயன்படத்தக்கது என்பதிலும் எனக்கு அய்யமில்லை என்றாலும், நாம் இன்றைய நிலைமையைவிட வேகமாக முன்னேற வேண்டுமானால் - ஆங்கிலந்தான் சிறந்த சாதனம் என்றும், ஆங்கிலமே அரசியல் மொழியாகவும், போதனா மொழியாகவும் இருந்தாக வேண்டுமென்றும், ஆங்கில எழுத்துக்களே தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்களாவது அவசியம் என்றும், ஆங்கிலம் நம் பேச்சு மொழியாவது நலம் பயக்கும் என்றும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்

2 comments:

லிவிங் ஸ்மைல் said...

அமெரிக்காவின் Noam Chomsky போல (அவரை விட கூடக் குறையவும் இருக்கலாம்.. ) இந்தியாவின் முக்கியமான மொழியியலாளராக பெரியாரைப் பார்க்கிறோம் ...


ஒரு முழுமையான rationalistஆக தத்துவம் > தர்க்கம்> மொழி என உணர்ச்சி வசப்படுதலின்றி சிந்திக்கும் பெரியாரையும் , அவரது மொழி சிந்தானையையும் வலைப் பதிவில் தந்த நண்பருக்கு

வாழ்த்துக்கள்...

நன்றியுடன்

லிவிங் ஸ்மைல் வித்யா

பட்டணத்து ராசா said...

வித்யா, இது ஏதோ ஒரு வலைப்பூவில் படித்ததை மயில் செய்தது ஒரு நண்பர். அவருக்கும் அந்த வலைப்பூ அன்பருக்கும் நன்றிகள்.