Monday, June 05, 2006

குரங்கு கேட்கிறது - விந்தன்

'மனம் ஒரு குரங்கு' என்று சொல்லிக் கொள்வதோடு மனிதர்களான நீங்கள் நிற்பதில்லை. ஆதியில் என்னிலிருந்து வந்ததாகவே நீங்கள் சொல்லிக் கொள்கிறீர்கள். அதையும் சாதாரணமாகச் சொல்லிக் கொள்ளவில்லை. ஆராய்ச்சி பூர்வமாகச் சொல்லி கொள்கிறீர்கள். அதற்கென்றே 'டார்வின் சித்தாந்தம்' என்று ஒரு தனி சித்தாந்தத்தையே உருவாக்கி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் சொல்லப் போனால் அதை ஒரு பெருமையாகக் கூட நீங்கள் கருதிக் கொண்டிருக்கிறீர்கள்!

நாங்கள் அந்த அளவுக்கு எங்களுடைய பெருமையைக் குறைத்துக் கொள்ளவில்லை. காரணம் உங்களுக்கு மட்டுமே இருப்பதாக நீங்கள் சொல்லிக் கொள்ளும் 'பகுத்தறிவு' எங்களுக்கு இல்லாமல் இருப்பதுதானோ என்னவோ?

இராம-இராவண யுத்தத்தில் ஈடுபட்டதன் காரணமாக உங்களில் சிலருக்கு நாங்கள் வணக்கத்துக்குரிய ஜீவன்களாக இருந்து வருகிறோம். ஆயினும் என்ன! கடவுளரைக் குறிக்கும் விக்ரகங்களை வேண்டுமானால் நீங்கள் 'நைவேத்தியம்' என்ற பேரால் பழம், பட்சணம் வைத்து வணங்குவீர்கள் - அவற்றை எடுத்து அவை தின்று விடாது என்ற தைரியத்தில்! எங்களை வணங்கும் போதோ? - 'ராம ராமா!' என்று கன்னத்தை வலிக்காமல் தொட்டுக் கொள்வதோடு சரி!

இதனால் என்ன நடக்கிறது? - எங்களுக்கு வேண்டியதை நாங்கள் உங்களிடமிருந்து தட்டிப் பறித்தே தின்ன வேண்டியிருக்கிறது.

நாங்கள் மட்டும் என்ன, நீங்களும் ஒருவரை ஒருவர் நாசூக்காக, நாகரிகமாகத் தட்டிப் பறித்தே தின்று கொண்டிருக்கிறீர்கள்!

இது உங்கள் பிறவிக் குணம். நீங்களாக யாருக்கும் எதுவும் கொடுக்க மாட்டீர்கள். அப்படியே கொடுத்தாலும் எதாவது ஒரு லாப நோக்கோடுதான் கொடுப்பீர்கள். நல்ல வேளையாகக் கடவுள் உங்கள் கண்ணில் படுவதில்லை. பட்டால் அவருக்கு எதிர்த்தாற் போலேயே யாராவது பிச்சைக்காரனுக்கு ஒரு காசை எடுத்து தாராளமாக தருமம் செய்து விட்டு, 'நான்தான் தருமம் செய்து விட்டேனே, எங்கே எனக்கு மோட்ச சாம்ராஜ்யம்? கொண்டா!' என்று கூசாமல் கேட்டாலும் கேட்பீர்கள்!

'இருப்பவன் எதையும் எதிர்பாராமல் இல்லாதவனுக்குக் கொடுப்பது' என்ற ஒரு தருமத்தை மட்டுமாவது நீங்கள் அன்றிலிருந்தே கடைப்பிடித்து வந்திருந்தால், இன்று உங்களிடையே திருடர்களும் கொலைகாரர்களும் ஏன் உருவாகியிருக்கப் போகிறார்கள்?.

அல்லது 'இந்த உலகத்தில் காணும் எல்லாமே எல்லாருக்கும் சொந்தமானவை. இவற்றில் உனக்கு, எனக்கு என்று எதுவும் இல்லை' என்ற 'வேதாந்த' த்தை எங்களைப் போலவே நீங்களும் உண்மையாகவே கடைப்பிடித்து வந்திருந்தாலும் உங்களிடையே 'இருப்பவன்' என்றும், 'இல்லாதவன்' என்றும், இப்போது எவனும் இருந்திருக்க மாட்டானே!

போகட்டும். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன தெரியுமா? - உங்களுக்குத் 'தன்னம்பிக்கை' இல்லாமற் போனதுதான்.

அந்தத் தன்னம்பிக்கை உங்களுக்கு இல்லையென்றாலும் உங்கள் குழந்தைகளுக்காவது இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா?

அதுவும் இல்லை.

நான்தான் சில சமயம் உங்கள் வீட்டுக் கூரையின் மேல் உட்கார்ந்து கொண்டு உங்களை கவனித்துக் கொண்டே இருக்கிறேனே! - நீங்கள் பல் தேய்ப்பதைப் பார்த்து விட்டு உங்கள் குழந்தை தானும் பல் தேய்க்க எண்ணிப் பேஸ்ட்டையும் பிரஷ்ஷையும் கையில் எடுத்தால் போதும், 'வேண்டாண்டா கண்ணு உனக்குத் தேய்க்கத் தெரியாது. இப்படி கொண்டா, நானே தேய்த்து விடுகிறேன்!' என்று நீங்களே அதற்குப் பல் தேய்த்து விடுகிறீர்கள். குளிக்கப் போனால் உனக்குத் தெரியாதுடா, இப்படி வா!' என்று நீங்களே அதைக் குளிப்பாட்டி விடுகிறீர்கள். சாப்பிடப் போனால், 'உனக்குத் தெரியாதுடா, இப்படி வா' என்று நீங்களே அதற்கு ஊட்டி விடுகிறீர்கள். உடை அணிந்து கொள்ளப் போனால் 'உனக்குத் தெரியாதுடா, இப்படி வா!' என்று நீங்களே அதற்கு உடை அணிவித்து விடுகிறீர்கள்.

எல்லாம் முடிந்து பள்ளிக்கூடத்துக்குப் போகும்போது 'அப்பா! பென்சில் வாங்க வேண்டும். காசு தா? என்று கேட்டாலோ, 'உனக்கு என்ன தெரியும், பென்சில் வாங்க? வா நானே வாங்கித் தருகிறேன்!' என்று அவனைக் கையோடு கடைக்கு அழைத்துப் போய்ப் பென்சில் வாங்கித் தந்துவிட்டு, 'பார்த்துப் போ, பத்திரமா போ! பார்த்துப்போ, பத்திரமா போ!' என்று ஆயிரம் 'பார்த்து'களும், ஆயிரம் 'பத்திர'ங்களும் சொல்லி அனுப்பி விட்டு வருகிறீர்கள். முடிந்தால் பள்ளி வரை சென்று அவனை அங்கே உட்கார வைத்த பின்னரே நீங்கள் வேலைக்குச் செல்கிறீர்கள்.

அதாவது, எடுத்ததற்கெல்லாம் 'உனக்கு ஒன்றும் தெரியாது, உனக்கு ஒன்றும் தெரியாது' என்று சொல்லிச் சொல்லியே அவனை ஒன்றும் தெரியாதவனாக வளர்த்து, எதற்கும் தன்னை நம்பி வாழாமல் பிறரை நம்பி வாழக் கூடியவனாக அவனை உருவாக்கி விட்டு விடுகிறீர்கள்!.

ஓ மனிதா ! என்னையும் என் குட்டியையும் சேர்ந்தாற் போல் எங்கேயாவது பார்த்திருக்கிறாயா நீ? - 'ஐயோ, குழந்தைக்கு ஒன்றும் தெரியாதே! தவறிக் கீழே விழுந்து விடுமே!' என்று நான் அதை வளைத்துப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டேன். அதுதான் என்னை வளைத்துப் பிடித்துக் கொண்டிருக்கும். அதுவும் எப்படி? - என் முதுகைத் தன் கால்களால் சுற்றி வளைத்துப் பிடித்தபடி, அடி வயிற்றில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும். நானோ அதைக் குனிந்து கூடப் பார்க்காமல் கிளைக்குக் கிளை, மரத்துக்கு மரம் இரை தேடித் தாவிக் கொண்டே இருப்பேன். அப்படித் தாவும்போது, 'பத்திரம், கெட்டியாகப் பிடித்துக் கொள்,' என்றோ 'விழுந்துவிடப் போகிறாய், ஜாக்கிரதை!' என்றோ அதனிடம் சொல்லி, அதை எச்சரித்தாவது வைப்பேன் என்கிறீர்களா? - மாட்டேன். தன்னைத் தானே தான் அது காப்பாற்றிக் கொள்ள வேண்டும். 'என்னைக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம்' என்ற எண்ணம் அதற்குள் எழுந்து விட்டால், பிற்காலத்தில் அது தன்னைக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி?

இப்படிச் செய்வதால், 'எனக்கு அதன் மேல் அன்பே கிடையாது' என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள். உண்டு. நானும் உங்கள் வீட்டுப் பெண்களைப் போல அதை என் முன்னங்கால்களால் அணைத்துப் பிடித்துக் கொண்டு பால் கொடுப்பதுண்டு - ஆனால் எதுவரை? - அதற்கு இந்த உலகம் தெரியும் வரை. தெரிந்த பின்? - எதற்கும் பிறரை அது ஏன் எதிர்பார்க்க வேண்டும்? ஏன் எதிர்பார்க்க விட வேண்டும்?

புலி இருக்கிறதே புலி, அதற்கு எங்களைக் கண்டால் வெல்லம். நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு அது எங்களைச் சுற்றிச் சுற்றி வரும். சில சமயம் அது எங்களைப் பிடித்துத் தின்ன மரத்தில் கூடத் தாவும். அதற்குப் பயந்து நாங்கள் வானளாவி வளர்ந்துள்ள மூங்கிலின் உச்சிக்குப் போய்விடுவோம். அந்த மூங்கிலோ எங்கள் கனத்தைத் தாங்காமல் 'ஸ்பிரிங்' போல் உதைத்துக் கொண்டு அப்படியும் இப்படியுமாக வீசி வீசி ஆடும். அந்த ஆட்டத்தில் சில சமயம் எங்களை வளைத்துப் பிடித்தபடி தொங்கிக் கொண்டிருக்கும் எங்கள் குட்டிகள், பிடி தளர்ந்து கீழே விழுந்து விடுவதுண்டு. அப்போதும் அவற்றைக் காப்பாற்ற நாங்கள் விரைந்து செல்வோம் என்கிறீர்களா? - மாட்டோ ம். தட்டுத் தடுமாறி எழுந்து தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளட்டும் என்றுதான் அவற்றை விட்டு விடுவோம்...

இம்மாதிரி சமயங்களில் அவை காணாமற் போனால் கூட அவற்றைத் தேடி நாங்கள் அலைவது கிடையாது. ஏனெனில், என்றாவது ஒருநாள் அவையே எங்களைத் தேடி வந்துவிடும் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அவற்றைத் தேட மாட்டோ ம் என்பதும் அவற்றுக்குத் தெரியும்.

மனம் விட்டுச் சொல்கிறேனே! இயற்கையாக இல்லாத பந்தத்தையும் பாசத்தையும் உங்களைப் போல் அவ்வப்போது விலை கொடுத்து வாங்கிக் கொண்டு, அவற்றுக்காக ஒருவருக்கு ஒருவர் பாரமாக இருந்து கொண்டு, சதா தொல்லையில் உழன்றபடி வாழும் வாழ்வு எங்களுக்குப் பிடிப்பதே இல்லை.

அப்படியிருக்க, எங்களிலிருந்து வந்ததாக நீங்கள் எப்படித் தான் சொல்லிக் கொள்கிறீர்களோ, அதுதான் எங்களுக்குத் தெரியவில்லை.

நன்றி : 'ஓ, மனிதா! ' (கட்டுரைத் தொகுப்பிலிருந்து)
ஆசிரியர் : விந்தன்
வெளியீடு : புத்தகப் பூங்கா

1 comment:

Chellamuthu Kuppusamy said...

போட்டது உங்க சொந்த மேட்டர் இல்லேன்னாலும், இரசிக்கற மாதிரி இருக்குங்க..