Wednesday, June 21, 2006

நீதி எனப்படுவது

இரண்டாவது உலக யுத்த சமயத்தில், மகாத்மா காந்தி தனிநபர் சத்தியாகிரகம் தொடங்கினார். யுத்தத்தை எதிர்த்து ஒருவர் பொது இடத்தில் பிரச்சாரம் செய்வார். அவரைக் கைது செய்து சிறையிலடைத்தாலும், வன்முறை எதிலும் ஈடுபடாத காரணத்தினால்
சிறையிலிருந்து ஜாமீன் பெற்று வெளி வந்து மீண்டும் பிரச்சாரம் செய்வார். இதைத் தவிர்ப்பதற்காக அன்றைய ஆங்கிலேய அரசு, இவ்வாறு கைதானவர்கள் ஜாமீனில் வெளிவராமல் தடுக்க 'Criminal law amendment act' ஐ அறிமுகப்படுத்தியது.
இன்றைக்கும் அந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருவது யாரை ஒடுக்க ?...

அடிப்படையில் ஆங்கிலேய காலத்துச் சட்டத்தைச் சார்ந்திருந்தாலும், நமது சட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் நலம் சார்ந்த சட்டங்கள் இந்திய விடுதலைக்குப் பின்பே உருவாக்கப்பட்டவை. அப்பொழுதெல்லாம் ஆயுள் தண்டனை என்பது 20 ஆண்டுக்
கடுங்காவல் தண்டனை. வ. உ.சி. க்கு விதிக்கப்பட்ட இரண்டு ஜென்ம தண்டனை என்பது நாற்பது வருட கடுங்காவல் தண்டனையே ஆகும். இப்பொழுது ஆயுள் தண்டனை பதினான்கு
ஆண்டு சிறை வாசமாகக் குறைக்கப்பட்டுவிட்டது. சாட்டையடி போன்ற ஈவிரக்கமற்ற தண்டனைகளும் ஒழிக்கப்பட்டு விட்டன. சர்வசாதாரணமாய்ப் புழங்கிக் கொண்டிருந்த தூக்கு தண்டனை இப்பொழுது மிகவும் அரிய குற்றங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. (ஆனால், இன்னமும் எடுத்ததற்கெல்லாம் தூக்குதண்டனை கொடுத்து அதை ஒரு கேலிப் பொருளாக
மாற்றிய, மாற்றிக் கொண்டிருக்கும் பெருமை திரைப்படங்களுக்கு உண்டு) அப்படியும் மக்கள் நம்பிக்கையை நீதிமன்றங்கள் இழந்து வருகின்றன. மேம்படுத்துதல் நடைபெறாத எந்தத் துறையும் ஒட்டடை படிந்தே காணப்படும். இன்றைய நீதித்துறை, வழக்குகளை
விசாரிக்க ஏற்படுத்தும் காலதாமதம் எதனால் ஏற்படுகிறது?

சாதாரணமாகக் கொலை வழக்குகள் மற்றும் சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகள் போன்றவை துரிதமாக நடைபெறும். (அப்படியும் 'ராஜீவ் காந்தி கொலை வழக்கு' முடிவதற்குள் இரு தேர்தல் காலம் முடிவடைந்து விட்டது). சாதாரண வழக்குகள் சவ்வு
போல இழுத்துக்கொண்டே போகும். சாதாரணமாக ஒரு பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட வழக்கு முடிவதற்குப் பத்து ஆண்டுகளாகின்றன.

இந்தியச் சட்டத்தில் விரைவில் வழக்கை முடிப்பதற்கு எவ்வித வழியும் இல்லை. ஆனால் வழக்கைத் தாமதப்படுத்த அநேக வழிகள் உண்டு. ஆங்கிலேயர் காலத்தில் வழக்குகள் குறைவாய் இருந்தன. அப்பொழுது கடைப்பிடிக்கப்பட்ட நீதிமன்ற நடைமுறைகள்
இன்றைக்குப் பயன்படாது. எனினும் ஆங்கிலேயர் காலத்து நீதிமன்ற நடைமுறைகளே இன்றும் பின்பற்றப்படுகின்றன. ஒரு வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வழக்கு எண் வழங்குவதற்கு இந்திய நீதிமன்றத்திற்கு ஒரு மாத காலம் தேவைப்படுகிறது. அதற்குப் பின்
அனுப்பப்படும் சம்மன்களை எதிர்த்தரப்பு, நிர்வாக ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து 'எதிர்த்தரப்பினர் ஊரில் இல்லை' எனச் சொல்ல வைத்து, ஆறு மாதத்திலிருந்து ஓராண்டு வரை இழுத்தடிக்கலாம். 'வழக்கறிஞருக்கு உடல்நிலை சரியில்லை' என்றோ, 'வழக்கில் ஈடுபடுத்தப்பட்டவருக்கு உடல்நிலை சரியில்லை' என்றோ ஆயிரமாயிரம் பொய் சொல்லி 'வாய்தா' க்கள் வாங்கலாம்.

நீதிமன்றம் தொடங்கிப் பத்தரை மணி முதல் பன்னிரெண்டரை மணி வரை இரண்டு மணி நேரம் நீதிபதி வழக்கு எண் போடுதல், தேதி கொடுத்தல் போன்ற பணிகளுக்கே சரியாகப் போய் விடுகிறது. இது போன்ற நிர்வாகப்பணிகள் நீதிபதியின் பொறுப்பிலிருந்து அகற்றப்பட
வேண்டும். வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்தல் என்பது மட்டுமே நீதிபதியின் பணியாக இருக்க வேண்டும்.

மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வழக்குத் தொடங்குவதற்கு ஒரு மாத கால அவகாசமும், முடிவதற்கு ஓராண்டு கால அவகாசமும் மட்டுமே தரப்படுகின்றன. வழக்கில் குறிப்பிட்ட நேரத்தில் ஆஜராகவில்லையெனில் அவருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்படும்.

வழக்குகள் தூரிதமாக நடைபெற மக்கள் நீதிமன்றங்கள் என்றழைக்கப்பட்ட 'லோக் அதாலத்' அறிமுகப்படுத்தப்பட்டது என்னவோ உண்மை. ஆனால், இரு தரப்பினரும் விரும்பினால்
மட்டுமே வழக்கினை 'லோக் அதாலத்தில்' நடத்த முடியும். இதனால் பெரும்பாலான வழக்குகள் வழக்கமான நீதிமன்றங்களிலேயே நடைபெறுகின்றன.

நவீன விஞ்ஞான வளர்ச்சியைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாதது நீதித்துறை பற்றிய மற்றொரு குறையாகும். இந்திய சாட்சிய சட்டம் (Indian evidence act) மாற்றப்பட வேண்டியது காலத்தின் தேவையாகிறது. ஜெராக்ஸ் பிரதிகளை எதிர்த்தரப்பு ஒப்புதல்
கொடுத்தால் மட்டுமே நீதிமன்றம் சாட்சியமாக அங்கீகரிக்கும். விடியோ பதிவுகள் போன்றவை இரண்டாம் தர சாட்சியமாகக் கருதப்படுமே தவிர முதன்மை சாட்சியாக (Primary evidence) ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. தீர்ப்பு நகல்களை நீதிமன்றத்திலிருந்து பெறுவதற்கே கூட சில நேரங்களில் ஏழெட்டு மாதங்களாகி விடுகின்றன.

D.T.P. போன்ற நவீன வசதிகளை உபயோகப்படுத்தினால் உத்தரவு நகல்கள் ஓரிரு வாரங்களில் தயாராகிவிடும். உயர்நீதிமன்றத்தில் பெயில் கொடுப்பதற்கு அச்சடிக்கப்பட்ட
'format' உபயோகப்படுத்துகிறார்கள். அதை எல்லா நீதிமன்றங்களும் கடைப்பிடிக்கலாம்.

நீதிமன்றத்தில் உடனடியாகக் களைந்தெறியப்பட வேண்டியவைகளில் முதன்மையானது ஊழல். உச்ச நீதிமன்றத்திலிருந்து பெஞ்ச் நீதிமன்றம் வரை ஊழல் என்பது தலைவிரித்தாடுகிறது. நீதிபதியின் தேர்வுக்கு அவரது குணத்தை விட செல்வாக்கே கருத்தில்
கொள்ளப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

நீதித்துறையை ஆராய்வதற்கென பல கமிஷன்கள் உருவாக்கப்பட்டன. உருவாக்கப்படும் பொழுது செய்தித்தாள்களில் இடம் பெறுவதைத் தவிர இந்தக் கமிஷன்கள் பெரும்பாலும் மக்கள் தொடர்பற்றே இருக்கின்றன. பல ஊர்களில் உள்ள வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகளிடம் கருத்துகள் கேட்டறியப்படாமலே கமிஷன்கள் செயல்படுவது எவ்வித
நன்மையையும் பயக்கப் போவதில்லை. தேங்கிக் கிடக்கும் வழக்குகள், கமிஷன் அறிக்கைகளைக் கிடப்பில் போடுவது போன்றவற்றை மாற்றவே இன்னும் அரசாங்கம் முயலாதபொழுது அரசாங்க அமைப்பின் மேம்பாட்டைப் பற்றிப் பேசுவது அரசியல்
நகைச்சுவையாகிவிட்டது.

மக்களைப் பற்றிய அக்கறை கொண்ட எந்தவொரு சமுதாய அரசியலமைப்பும் தனது குறைகளை நிவர்த்தி செய்தபடி மேலும் மேலும் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டிருக்கும்.
அரசியலமைப்பில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யாத இந்திய அரசாங்கம், சில விஷயங்களில் எவ்வளவு வேகமாய்ச் செயல்படுகிறது என்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. உதாரணத்திற்குப் பஞ்சாப் தீவிரவாதிகளின் நவீன ஆயுதங்களை
எதிர்கொள்ள அம் மாநிலக் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட ஸ்டென் துப்பாக்கிகள் இன்று எல்லா மாநிலக் காவல்துறையினர் கைகளிலும் காணக் கிடைக்கிறது!

ரப்பர், பிளாஸ்டிக் குண்டுகள், தண்ணீர் பீரங்கி என்று பொதுமக்களிடையே அதிகம் சேதத்தை, உயிர்ப்பலியை ஏற்படுத்தாத ஆயுதங்களை வெளிநாட்டுக் காவல்துறையினர் பயன்படுத்தும்போது, இங்கிலாந்து இறக்குமதிச் சட்டங்களை இன்னமும் கடைப்பிடித்துக்
கொண்டிருக்கும் நாம், பொதுமக்களுக்கெதிராகக் காவல்துறையினர் கையாளும் வன்முறை ஆயுதங்களுக்கு மட்டும் இன்னமும் விடை கொடுக்காமல் இருப்பது வன்முறைக்கு மேலும் வித்திடுவதாய் அமையாதா?

1 comment:

நன்மனம் said...

விடை கொடுக்கும் அதிகாரம் அரசியல் வல்லுனர்களுக்கு தான் உள்ளது. அதில் சுய எண்ணத்துக்கு அப்பால் நோக்க கூடியவர்கள் அதிகரிக்கும் போது தான் இதற்க்கு விடை கிடைக்கும் என்பது தான் உண்மை.(இது முந்தய ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும்)