Thursday, July 06, 2006

நாய் குரைப்பின் காலங்கள்

நாய்க் குரைப்பின் பொருள் என்க்குத் தெரியும்போது
என் பொருள் சிக்கலும் விடுபட்டுப்போகும்.
என்னைச் சுற்றிச் சதா இந்த நாய்க் குரைப்பு
என் குடியிருப்பு அப்படி.

நாய்க் குரைப்பின் பொருள்பற்றி நான்
யோசிப்பது ஏனெனில்
வேறெங்கும் பொருளற்ற திவிரம் இப்படிப்
பீறிடுவதை நான் கண்டதில்லை என்பதாலேயே.

தன் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவையும் குவித்து
அடி வயிற்றை எக்கி,
சூன்யத்தில் தலை தூக்கி,
நாய்க் குரைப்பதை நீங்களும் கவனித்திருப்பீர்கள்.

நாய்களுக்கு அவற்றின் குரைப்பின் பொருளோ
பொருளின்மையோ தெரியும்போது
அவை எப்படிக் குரைக்கும்?

குரைக்குமா?

ஒருசமயம் அவை குரைப்பதை விட்டு
வாலை மட்டும் ஆட்டிக்கொண்டிருக்கலாம்.
அந்தக் காலம் இப்போதைவிடவும் நன்றாக இருக்கும்.

...பசுவய்யா

No comments: