Friday, December 08, 2006

வயல்களுக்கு நடுவே கமலஹாசனும், ஹேமமாலினியும்

சென்னை நகரத்தின் தபால் அலுவலகங்களுக்கு ஆறு இலக்க எண்கள் தருவதற்கு முன்பு சென்னை 18 என்றால், அது தேனாம்பேட்டையா, ஆழ்வார்பேட்டையா என்று உடனே விசாரிப்பார்கள். ஆழ்வார்பேட்டை என்றால் புது ஆழ்வார்பேட்டையா அல்லது கிராமமா என்று கேட்பார்கள். தேனாம்பேட்டை என்றால் வெள்ளாளத் தேனாம்பேட்டையா, வன்னியத் தேனாம்பேட்டையா என்று உறுதி செய்து கொள்வார்கள். இன்றும் 600 018 என்றால் இவ்வளவு விசாரிப்புகளைத் தவிர்க்க முடியாது.
சென்னையிலேயே ஓரிடத்திற்கு நான்கு சாலைகளை எல்லைகளாகக் கூற முடியுமானால், அது இந்த ஆழ்வார்பேட்டை-தேனாம்பேட்டைதான். வடக்கே கதீட்ரல் சாலை. தெற்கே சேமியர்ஸ் சாலை. மேற்கே மௌபரீஸ் சாலை. கிழக்கே அண்ணாசாலை. இந்த நான்கு சாலைகள் நடுவில் இந்த பகுதியில் உள்ள சிறு சிறு குடியிருப்புகளையும், சந்து பொந்துகளையும் பட்டியல் எடுக்க நீண்ட நேரமும் பொறுமையும் வேண்டும். சைதாப்பேட்டை போல இங்கும் பல ஜாதிகள் பெயரில் தெருக்கள் உண்டு. இன்று மாற்றுப் பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தால் கூட ஜாதிப் பெயர்கள் சொல்லித்தான் அடையாளம் காண வேண்டியிருக்கிறது.
இந்தப் பகுதியில் ஒரு காலத்தில் நெல் பயிரிடப்பட்டது என்றால் நம்பும்படியாக இருக்கிறதா ? இன்று கஸ்தூரி எஸ்டேட் என்றும், சோழா ஷெரட்டன், ரஷ்யக் கலாச்சார மையம் என்றிருக்கும் இடங்களில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கூடப் பச்சை பசேலென்ற வயல்கள் இருந்தன. இன்று சென்னையின் மிகவும் செல்வாக்கும் செல்வமும் கொண்ட பிரமுகர்கள் அங்கு வாழ்கிறார்கள். ஹிந்தித் திரையுலகில் பதினைந்து ஆண்டுகள் நம்பர் ஒன் கதாநாயகியாக விளங்கிய ஹேமாமாலினி முதலில் தன் இல்லத்தையும் பின்னர் நடனப் பள்ளியையும் இங்குதான் அமைத்திருந்தார்.
பச்சைக் குழந்தை வேடத்திலிருந்து படு கிழவன் வேடம் வரை அணிந்து சிறப்பிக்கும் கமல்ஹாசன் இந்த முன்னாள் வயலில்தான் வீடு வாங்கிக் கொண்டு, புதுமணம் புரிந்துகொண்டு புதுக்குடித்தனம் துவங்கினார்.

அசோகமித்ரன்

அசோகமித்ரனின் சென்னை சுவடுகளில் இருந்து..

1 comment:

Anonymous said...

//மேற்கே மௌபரீஸ் சாலை. கிழக்கே அண்ணாசாலை.//

திசைகள் தவறாக உள்ளது பட்டணத்து ராசா. மேற்கே அண்ணாசாலை சாலை. கிழக்கே மௌபரீஸ் சாலை என்று இருந்திருக்கவேண்டும்.