முந்தைய அ.தி.மு.க அரசு கொண்டு வந்த கேபிள் டி.வி., எம்.எஸ்.ஓ நிறுவனங்களைக் கையகப்படுத்தும் மசோதாவை, மாநில அரசின் அதிகார வரம்புக்குள்படாத சட்ட முன்வடிவு என்று காரணம் காட்டி தற்போதைய தி.மு.க அரசு விலக்கி கொண்டது. கேபிள் டிவி சட்டம் மட்டுமல்ல புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக முந்தைய அரசால் ஒதுக்கப்பட்ட இடத்தை அண்ணா பல்கலைக்கழகத்திடமே தற்போதைய அரசு ஒப்படைத்திலிருந்து, விவசாயிகளின் நலன் கருதி உருவாக்கப்பட்ட 'உழவர் பாதுகாப்பு திட்டம்' வரை பல்வேறு திட்டங்களை ரத்து செய்துள்ளது.
ஒரு அரசு கொண்டு வந்த சட்டங்களையும், மக்கள் நலத்திட்டங்களையும் அடுத்து வரும் அரசு அப்படியே தொடர்ந்து செயல்படுத்தாமல், ஒன்று அத்திட்டத்தை அப்படியே கிடப்பில் போடுவது அல்லது அத்திட்டத்தை முடக்குவது என்கிற வழக்கத்தை சமீப ஆண்டுகாலமாக ஆட்சியாளர்கள் பின்பற்றி வருகிறார்கள்.
கடந்த 2001ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய அ.தி.மு.க அரசு முந்தைய தி.மு.க அரசால் கொண்டு வரப்பட்ட சமத்துவபுரம், உழவர் சந்தை போன்ற திட்டங்களை அப்படியே கிடப்பில் போட்டது. அதுமட்டுமல்லாமல் தி.மு.க அரசால் நியமிக்கப்பட்ட சாலை பணியாளர்கள் சுமார் 10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது.பின்பு அவர்கள் நீதிமன்றம் சென்று தங்களுக்கான நீதியை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் தி.மு.கவின் தலைமைக்கு நெருக்கம் என்று கருதப்பட்ட அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகிகளும் பந்தாடப்பட்டு, தங்களுக்கு ஆதரவானவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டது.
இப்போது பந்து தி.மு.கவின் கையில். மறுபடியும் சட்டங்கள், திட்டங்கள் மாற்றப்படுகின்றன அல்லது வாபஸ் பெறப்படுகின்றன. அதிகாரிகள் பந்தாடப்படுகின்றனர். இதுவரை கிடப்பில் முடங்கி கிடந்த சமத்துவபுரம், உழவர் சந்தை போன்றவைகளுக்கு மீண்டும் புத்துணர்ச்சி அளிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் கழகங்கள் இரண்டுமே ஒருவரை ஒருவர் குறைக்கூறுவதிலும், ஒருவர் மீது ஒருவர் பழிவாங்கும் போக்கை கடைப்பிடிப்பதிலுமே அதிக கவனம் செலுத்தி வருகிறது.
மோனோ ரயில் திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம், கேபிள் டிவி மசோதா என்று வரிசையாக தி.மு.க அரசால் விலக்கிக் கொள்ளப்பட்டதற்கு அ.தி.மு.க பொதுசெயலர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது மட்டுமல்லாமல் ஒரு கோடியே 99 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள், சிறு மற்றும் குறுவிவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு உழவர் பாதுகாப்புத் திட்டத்தை கைவிடும் தன் முடிவை தி.மு.க அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அரசுகள் மாறும் போது முந்தைய அரசின் திட்டங்களை கிடப்பில் போடுவதன் மூலம் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை, நடுத்தர மக்கள்தான் என்றால் அது மிகையல்ல.
சட்டப்பேரவையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் முழு ஆதரவுடன் உருவாக்கப்பட்ட சட்டங்களை புதியதாக வரும் அரசு விலக்கி கொள்ளும்பட்சத்தில் அச்சட்டங்களை இயற்றுவதில் என்ன பயன் இருக்கப்போகிறது. அது எந்தவகையில் மக்களை சென்றைடயும். இப்படி மாறி மாறி வரும் அரசுகள் முந்தைய அரசு கொண்டு வந்த நலத்திட்டங்களையும் முடக்கி வைத்தால் மக்கள் நல பணிகள் எந்தவகையில் ஏற்றம் பெறும்.
ஒரு அரசு கொண்டு வரும் நலத்திட்டங்களிலோ அல்லது சட்டங்களிலோ குறைகள் இருந்தால் அவற்றில் சில மாற்றங்களையோ அல்லது அந்த குறைகளை களைந்தோ அத்திட்டங்களை செயல்படுத்த முனைய வேண்டுமே தவிர, அத்திட்டம் கைவிடப்படுவது சரியான தீர்வு அல்ல.
தமிழகத்தில் தொடர்கதையாகி போன இத்தகைய வழக்கங்களினால் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மேல் ஒரு நம்பகத்தன்மை இல்லாமல் போய்விடுவதற்கு ஏதுவாக இருக்கும். இது ஆரோக்கியமானதும் அல்ல.
ஆட்சி அதிகாரங்கள் மாறலாம். ஆனால் சட்டங்களும், நலதிட்டங்களும் தொடர்ந்து எந்தவிதமான இடையூறும் இல்லாமல் தொடர வேண்டும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பு.
No comments:
Post a Comment